வேதபகுதி: ஏசாயா53:5, நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய
அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும்
ஆக்கினை அவர்மேல் வந்தது, அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.
இயேசுகிறிஸ்து பிறப்பதற்கு முன்னே 800 ஆண்டுகளுக்கு பின் இயேசுகிறிஸ்து
மரிக்கப்போவதையும் எப்படியெல்லாம் பாடுகளின் மத்தியில் செல்லப்போகிறார் என்பதையும்
ஏசாயா தீர்க்கதரிசி தெளிவாக அன்றே கூறியுள்ளார்.
குறிப்பாக ஏசாயா53:5ம் வசனத்தில் 4 காரியங்களைக் கூறியுள்ளார். இரண்டு முக்கிய
நியாயந்தீர்ப்புகள், தேவன் தாமே அவர் ஏற்றுக்கொண்ட விஷயம், அவர் நமக்காக சம்பாதித்து
வைத்திருக்கிற மிகப்பெரிய ஆசீர்வாதம். என 4காரியத்தை கூறியுள்ளார் ஏசாயா.
1. நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார்:
காயம் என்பது எபிரெய பாஷையில் சலால் (ஊடுருவக்குத்துதல்).
உதா: நமக்கு நெருக்கமான நபர்கள் நமக்கு பிடிக்காத காரியத்தை செய்யும் போது, ஏற்படுகிற
வலி.
இயேசு கிறிஸ்து சரீரத்தின்படி காயப்படுத்தப்பட்டார், அந்த காயத்தை விட நாம் செய்கிற சில
காரியங்கள் அவரை இன்னும் அதிகமாக காயப்படுத்துகிறது. நம்முடைய மீறுதலினிமித்தம் அவர்
காயப்பட்டார்.
மீறுதல் என்பது - தெரிந்திருந்தும், விருப்பத்தோடு தேவனுடைய திட்டத்திற்கு மீறி (எதிர்த்து)
நிற்பது.
பாவம் - எல்லையை மீறுவது பாவம். (தேவன் வரையறுத்த எல்லையை மீறி செயல்படுவது பாவம்).
உதா: குடும்பத்திலிருக்கும் நபர்கள் இப்படி இருக்க வேண்டும். எபேசியர்5:22, மனைவிகளே,
கர்த்தருக்குக் கீழ்படிகிறதுபோல, உங்கள் சொந்த புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள்.
எபேசியர்5:25, புருஷர்களே உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்.
அநேக கட்டளைகள் நடைமுறை வாழ்க்கையில் மனிதன் இப்படிதான் வாழ வேண்டும் என
வேதாகமத்தில் தேவன் கூறியுள்ளார். நாம் இதன்படி வாழ்கிறோமா?
பத்து கட்டளைகளை தேவன் நமக்கு கொடுத்திருக்கிறார்(யாத்20:3-17). நாம் இந்த
கட்டளைகளின்படி வாழ்கிறோமா?
• முதல் கட்டளையின் படி நாம் எல்லாவற்றிலும் கர்த்தரையே சார்ந்து கொள்கிறோமா?
(எரே17:5-9ன் படி மனுஷனுடைய இருதயம் எப்போது கடவுளை நம்பும், எப்போது மனுஷனை
நம்பும் என்றே தெரியாது.) நம்முடைய இருதயம் தேவனை நம்பியிருக்கிறதா? இந்த வசனம்
நமக்குத் தெரிந்திருந்தும் நாம் மீறுகிற நபர்களாகவே இருக்கிறோம்.
• விக்கிரக ஆராதனையான பொருளாசை நமக்குள் இருக்கிறதா?
உதா: (விக்கிரகாராதனையான பொருளாசை) கொலோசெயர்3:5.
பழைய ஏற்பாட்டில் ராகேல் தன் தகப்பனுடைய சொரூபங்களை திருடி வைத்திருந்தாள்.
வழியிலேயே மரித்து போனாள் என்று பார்க்கிறோம்.
• தேவனுடைய நாமத்தை நாம் எத்தனை இடத்தில் வீணிலே வழங்குகிறோம்? இந்த
கட்டளைகளை தெரிந்திருந்தும் நாம் அநேக நேரங்களில் மீறி நடக்கிறோம். இப்படி ஒவ்வொரு
காரியத்தையும் நாம் மீறும் போது நம்முடைய நடத்தையின் மூலமாக, தேவனுடைய இருதயம்
காயப்படுகிறது.
2. நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்:
அக்கிரமம் என்பது –ஒழுக்கக்கேடான நடத்தை, இருதயத்தில் மறைந்திருக்கிற பாவகுணம்,
அநீதியான எண்ணங்கள்.
அக்கிரம சிந்தை என்பது: அறநெறியற்ற தன்மைகள், நீதியற்ற தன்மைகள், சுயநலம் மிகுந்த
எண்ணங்கள், இருதயத்தில் இருக்கும் அசுத்தமான எண்ணங்களே அக்கிரமங்கள்.
உலகம் முழுவதும் சுயநலமாய் தான் இருக்கிறது ஆனால் இயேசுவை ஏற்றுக்கொண்ட நாம்
சுயநலமாய் இருக்கக்கூடாது.
இன்பகோட்பாடுகள் இருக்கும் வரை எல்லாவற்றையும் அனுபவித்து வாழ வேண்டும் என்ற
எண்ணங்களே அக்கிரமங்கள். சுயநலம் மிக்கவர்களால் பிரச்சனைகள் தான் ஏற்படும். நாம்
சுயநலமாய் இருக்கிறோமா?
சுயநலமற்றவர்களாய் நாமிருந்தால் தேவன் நம்மை ஆச்சரியமாய் நடத்துவார்.
3. நமக்கு சமாதனத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது:
சுயநலமிக்க எண்ணங்களால் நாம் காயப்படுகிறோம். மீறுதல்களை செய்கிறோம். சமாதானத்தை
இழந்து வாழ்கிறோம். எனவே தான் நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல்
வந்தது. நம்முடைய மீறுதல்கள் அக்கிரமங்களை அவர் ஏற்கனவே சுமந்து தீர்த்து
இருக்கிறார். எனவே நாம் அவரிடம் சென்று நம் மீறுதல்கள் அக்கிரமங்களை அவர் சமூகத்தில்
அறிக்கையிட்டு மன்னிப்புக் கேட்க வேண்டும். அவர் நம்மை மன்னிக்கும் தேவனாயிருக்கிறார்.
4. அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.
நம்முடைய இருதயத்தில் இருக்கும் சமாதானமே, தேவன் நமக்கு தரும் நிம்மதியே சுகம் ஆகும்.
எனவே நாம் நம்மை அவர் சமூகத்தில் முற்றிலும் நம்மை அர்ப்பணித்து வாழ வேண்டும். அவர்
நம்மை நேர்த்தியாய் நடத்துவார். ஆமென்.